Saturday, December 2, 2006

நலமுடன் வாழ


அன்பர்கள் அனைவரும் வாழ்க வளமுடன். இயற்கை, மனிதனுக்கு எல்லா வளங்களையும் அன்பும் கருணையுடன் அளித்துள்ளது. பஞ்ச பூதங்களின் பரிணாம

வளர்ச்சியினால், பிரபஞ்சத்தில் கோடன கோடி கோள்களும், நட்சத்திரங்களும், ஓருயிர் தாவரம் முதல் ஐந்தறிவு மிருகம் வரையும், இறைநிலைப் படைப்பின் இறுதி நிலையாகிய மனிதன்வரை வந்துள்ளது. வளங்களையெல்லாம் ரசிப்பதற்காகவும், இயற்கையினை தன் ரசனைக்கேற்ப மாற்றிக் கொண்டு இன்பம் துய்க்க கலைகளைப் படைக்கும் ஆற்றல் மனமாக இறைநிலை அளித்தது. இயற்கைக்கு மாறுபாடின்றி

கலைகள் வளறும்போது அது மக்களின் இன்பத்திற்கு வழிகாட்டுகிறது. மாறுபாடாக இயங்கும்போது பெரும் துன்பத்தை அளிக்கிறது.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே மெய்ஞ்ஞானம் பெற்ற மகான்கள்

பல்வேறு தத்துவங்களை மக்களின் வளர்ச்சிக்காக அளித்துள்ளனர். வேதங்களும், மதங்களும் மக்களுக்கு அன்பையே போதித்தன. பின் வந்தவர்கள், தங்கள் வசதிக்கேற்ப, சுயநலத்திற்காக மக்களைப் பிரித்து வைத்தனர். உலகில் வாழும் அனைவரும் முதன் முதலில் தோன்றியவர்களின் பேரப் பிள்ளைகள்தான் என்பது பரிணாம வளர்ச்சி குறித்த ஞானம் உள்ளவர்களுக்குத் தெரியும். இவ்வளவு பெரிய மாற்றங்களைப் பெற்று, விஞ்ஞான அறிவிலே உயர்ந்து விளங்கும் மனிதன் மதம், மொழி, நாடு, இனம், தொழில் இன்னும் எத்தனையோ வழியினால் பிரிக்கப் பட்டுள்ளான். அந்தந்த நிலையிலாவது ஒற்றுமையுடன் இருக்கிறனா? இல்லை. அதிலேயும் உள் வேற்றுமை. இவைகளையெல்லாம் போக்க அவ்வப்போது மகான்கள்

தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றனர். மக்களை உய்விக்க தொண்டாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். மிக வேகமான இக்காலத்தில் அதையெல்லாம் கேட்டு அதன் வழி நடக்க நேரமில்லை.

மனிதனுக்கு ஐந்து கடமைகள் உண்டு. அவை:1.தான் 2. தன் குடும்பம் 3. தன் சுற்றம் 4. ஊர் 5. உலகம். இவைகளில் ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஆற்றவேண்டும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.. முதலில் தன்னைப் பற்றிய அறிவு வேண்டும். தன் உடல், உயிர், மனம் பற்றிய ஞானத்தைப் பெறவேண்டும். இந்த உடல் பஞ்ச பூதங்களின் கூட்டு. நிலம் உடலாகவும், நீர் உடலில் இரத்தமாகவும், நெருப்பு உடலில்

98.4 டிகிரி வெப்பமாகவும், காற்று உடலில் மூச்சாகவும், விண் உடலில் உயிராகவும்

இயங்கிக்கொண்டு இருக்கின்றன. உடலில் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் இவைகளிலே எது கூடினாலும், குறைந்தாலும் மனிதனுக்குத் துன்பம்தான்.

“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று” ..திருவள்ளுவனார். துன்பம் கலவாத இன்பத்தையே மனிதன் விரும்;புகிறான். இன்பத்தை உடலாலேயே அனுபவிக்கிறோம். அத்தகைய உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம். உடலும், உயிரும், மனமும் சேர்ந்தால்தான் மனிதன். உடலுக்கும், உயிருக்கும் எப்போது பிணக்கு ஏற்பட்டாலும் அது நோய். உடலுக்கும், உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்க்கை. உடலுக்கும், உயிருக்கும் பிரிவு ஏற்பட்டால் மரணம்

என்கிறார் மகரிஷி.. உடலுக்கும், உயிருக்கும் நல்லுறவு கெடுகிறது என்பதைப் பற்றிய விளக்கம் அவசியமாகிறது. காற்று, வெப்பம், ரத்தம் இவற்றை முறையே வாதம், பித்தம்,சிலேத்துமம் என்று வைத்தியர்கள் கூறுவர். நோய் ஏற்பட்டால் அவற்றை நாடித்துடிப்பின் மூலம் கணித்து, தக்க மருந்து கொடுத்து சரி செய்து மீண்டும் உடலுக்கும், உயிருக்கும் நல்லுறவு ஏற்படுத்துவர். உயிர்தான் உடலை நடத்துகிறது. காக்கிறது. ஆகாசமே உயிராக இருக்கிறது. அது உடலில் இயங்குவதன் மூலம் உடலுக்கு காந்த சக்தி கிடைக்கிறது. காற்றும், வெப்பமும் உடலுக்கு மின்சார இயக்கத்தைத் தருகின்றன. ஆனால் உடலின் நலத்திற்கும், கேட்டிற்கும் ரசாயன இயக்கமே பெரிதும் காரணம்.இவைகள்தான் நோயையும், நலத்தையும் நிர்ணயிக்கின்றன. அதனால்தான் மாருந்துகளெல்லாம் ரசாயனமாகவே இருக்கின்றன. ரசாயன மாற்றத்திற்கும், நன்மையாகவோ அல்லது தீமையாகவோ இருப்பதற்கு ஆறு காரணங்கள் உண்டு. அவைகளில் இயற்கைக் காரணங்கள் இரண்டு, செயற்கைக் காரணங்கள் நான்கு. கருவமைப்பும், கோள்களின் நிலையும் இயற்கைக் காரணங்கள். உணவு, எண்ணம், செய்கை, சந்தர்ப்பமோதல் ஆகியவை செயற்கைக் காரணங்கள் ஆகும்.

சில சந்தர்ப்பவசத்தால், நாம் செயல்படும்பொழுது, தடுப்பு நிலையை நாம் கடந்து விடுகிறோம். இயற்கைச் சக்திகளால் ஏற்படும் விளைவுகளைத் தடுத்துக் கொள்வது சாத்தியமன்று. எதிர்ப்புச் சக்தியை (Immunity) உயர்த்திக்கொள்ள சில பயிற்சிகளைச்

செய்யவேண்டும். அப்படிச் செய்வதனால், இயற்கைச் சக்திகளின் விளைவுகளாலும், நாம் செய்த தவறுகளால் ஏற்படும் விளைவுகளாலும், உடல் நலக்கேடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். கூடவே முறையான ஒழுக்கப் பழக்கங்களும், நல்லெண்ண, நற்செய்கைகளும் வேண்டும். நாம் சமுதாயத்தின் அங்கம். இந்த உடல் சமுதாயத்தின் சொத்து. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை..ச் இந்த உடலுக்காக நாம் சமுதாயத்தில் கடன்பட்டிருக்கிறோம். அன்றாடம் அனுபோகப் பொருட்களையும் அதனிடமிருந்து பெற்று அனுபவித்து வருகிறோம். இந்தக் கடனைத் திருப்பித்தரும் வழியே கடமை எனப்படுகிறது. உடலைக் கொண்டுதான் இந்தக் கடமையை ஆற்றவேண்டும்.

ஆன்மீக நோக்கில் உடல் நலத்தின் அவசியத்தைப் பார்ப்போம். இதுவரை மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள், பாவப்பதிவுகள் நீங்கினால்தான் வீடுபேறு. விடுதலை கிடைக்கும். பாவப்பதிவுகல் எப்படிப் போகும். உடலை எடுத்தால்தான் அந்தப் பாவப்பதிவுகள் துன்பமாக அனுபோகமாகி நீங்கும் அல்லது யோக சாதனைகள் மூலம்

நீக்கிக்கொள்ளலாம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.. அதற்குத்தான் இந்த உடலை உயிர் எடுத்துள்ளது. ஆகவே இந்த உடலை உயர்வாகக் கருதி, சீர்கேடு அடையாமல் போற்றிப் பாதுகாக்கவேண்டும். அப்போதுதான் ஆன்மீகப்பயணம் தடைபடாமல் இருக்கும்.

“ உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் “

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” ..திருமூலர்

எனவே இந்த உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளும், ஆசனங்களும் பெரியோர்களால் வகுக்கப்பட்டுள்ளது. நோய் வராமல் தடுத்துக் கொள்ளவும், வந்தால் போக்கிக்கொள்ளவும் உடற்பயிற்சி அவசியம். பல்வேறு ஆசன, உடற்பயிற்சி முறைகள் இருந்தாலும், இன்று எட்டு வயது முதல் எண்பது வயது வரைகூட சுலபமாகவும், செலவின்றியும் சென்னை, தி;ருவான்மியூரில் உள்ள உலக சமுதாய சேவா சங்கம் மூலம், அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி பல ஆண்டுகாலம் உழைத்து வடிவமைத்த அனைத்து உடற்பயிற்சிகளையும் கற்று தினமும் செய்து நோயின்றி வாழமுடியும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் பல தவ மையங்கள் இயங்கி வருகின்றன. http://www.vethathiri.org காணவும். வாழ்க வளமுடன்.

உதவி நூல்கள்: வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை, எளியமுறை உடற்பயிற்சி.

Monday, November 27, 2006

யோகமும் வாழ்க்கையும்!

யோகம் என்பது பேரானந்தம், சமாதி, தன்னைக் கடந்து செல்வதற்கான வழி என்று பல ஞானிகள்பல்வேறு விளக்கங்களைச் சொல்லியுள்ளனர். சமாதி என்பது சமம் + ஆதி அதாவது இறைநிலைக்குச்சமம் என்பது பொருளாகிறது. சமண,பெளத்த, இந்து மரபுகளில் யோக வளர்ச்சி அளப்பற்கரியது.பல்வேறு வகையான யோக நெறிகள் உலகம் முழுதும் வழக்கில் உள்ளன. மொத்தத்தில் உடல் நலத்துக்கும், மன வள்த்துக்கும் யோக முறையைப் பின்பற்றுவது மிகவும் அதிகரித்துள்ளது.

மதங்களைச் சார்ந்தும், ஞானிகளைச் சார்ந்தும் பல யோக முறைகள் மக்களுக்கு பெரும் நன்மையைஅளித்து வருகின்றன. யோகமுறை என்பது நடைமுறைப் பயிற்சியாகும். இதை தானாகவோ, நூல்கள் மூலமாகவோ கற்றுக்கொள்வது வெற்றியைத் தராது. குருவின் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகளே வெற்றி அளிக்கும். குருஎன்பதன் பொருள் இருளை நீக்குபவர் என்பதாகும். தீட்சை அளித்து ஒரு குறிப்பிட்ட யோகநெறியில் ஈடுபடுத்தவும், வழிகாட்டும் பொறுப்பினையும் குரு ஏற்கிறார்.

மனிதனின் ஆன்மீகப்பயணத்தில் குருவின் பணி மிக உயர்வானது. குருவானவர் ஆத்மாவை, பேருண்மையை உண்ர்ந்த, உண்ர்த்தும் வல்லமை படைத்தவராகிறார். இன்று விஞ்ஞானம் மிக உயரிய நிலையில் மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றது. எல்லாவிதவளங்களும் இருப்பினும், பெரும்பாலான மக்கள் மன அமைதியின்றி இருக்கின்றனர்.

ஆன்மீகவளர்ச்சியும் சரியான நிலையில் சென்று கொண்டிருக்கிறதா? என்பதும் கேள்விக்குறி. வேதங்களும்,எல்லா மதங்களும், சமயங்களும் அன்பையே போதிக்கின்றன. உலகம் முழுவதும் போர், பிணக்கு, அமைதியின்மையையே காண்கிறோம். எனவே, இன்னும் அடிப்படையில் உள்ள குளறுபடிகளைஇன்னும் நீக்கியபாடில்லை என்பது வெளிச்சம். உலகம் முழுவதும் போரின்றி அமைதி பெறவேண்டும் என்று ஞானிகள், மகான்கள், சில தலைவர்கள் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருந்தாலும்பெரும் தலைவர்கள், அரசியல்வாதிகள், மதவாதிகள், பெரும் வியாபாரிகள் இதற்குமுட்டுக்கட்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். தனது நாடு, மொழி, மதம், இன சுய நலத்திற்காகத் தொடர்ந்து உலக அமைதியைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படியானால் இதற்கு முடிவே இல்லையா? என்றால் நிச்சயம் உண்டு. இது ஒரு நீண்ட பயணம். தனி மனித அமைதி, குடும்ப அமைதி, ஊர் அமைதி, உலக அமைதி என்ற முறையில் ஞானிகள்வழிவகுத்துச் சென்றுள்ளனர். இதற்கு யோகநெறி வழி காட்டுகிறது. அவற்றினை முறையாக அறிந்துசெயல்படுத்த மக்கள் முன்வரவேண்டும்.


தனிமனித ஒழுக்கம், விளைவறிந்த விழிப்பு நிலை, செயலுக்கேற்றவிளைவு; என்ற அறிவு நிலைக்கு மக்களை மாற்றும் அறிவினை யோக ஆன்மீக வாழ்வு அளிக்கிறது.இன்று உலகம் முழுவதும் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதற்கான கல்வி முறைகள் மட்டுமே வழக்கத்தில்உள்ளன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஒழுக்க நெறி பற்றியோ உடல் நலம் குறித்தோ கல்வித் திட்டம்இல்லை. அது பற்றி பொறுப்பிலுள்ளவர்களும், மக்களும் கவலைப்படவில்லை.

இன்றைய காலத்தில் மக்களுக்கு எல்லா வசதிகளும் இருந்தாலும், பெரும்பாலான குடும்பங்களில் அமைதியில்லை. உடல் நலம், மனநலமின்றி துன்பமடைகின்றனர். குறிப்பிட்ட வயதைக் கடந்த பின்னர், உடல் நலம் கெடும்போதுஅந்த வேளையில் ஏதாவது ஒரு ஆன்மீக இயக்கத்தினைத் தேடி அதில் இணைந்து முடிந்த வரைதங்களைக் காத்துக்கொள்கின்றனர். பெரும்பாலான ஆன்மீக இயக்கங்களில் அதனால்தான் வயதானவர்-களையே பார்க்கிறோம். யோகம், தியானம் இவைகளை இளைஞர்கள் தங்களுக்குத் தேவையற்றதுஎன்றும் அது வயதானவர்களுக்கானது என்றும் தவறாக எண்ணுகின்றனர். இது முழுமையான பக்திமார்க்கம் என்று பலர் ஒதுங்கிச் செல்கின்றனர். உண்மையான ஆன்மீகத்திற்கும், பக்திக்கும் நிறையவேறுபாடு உண்டு. எனவே 14 வயதுக்கு வந்த அனைத்து மனிதர்களும், எவ்வித வேறுபாடின்றி முழுமையானயோகக் கலையினை கற்றுக்கொண்டு வாழ்நாள் முழுதும் இன்பமாக வாழமுடியும் என்று அருட்தந்தைவேதாத்திரி மகரிஷி கூறுகிறார். வாழ்வின் துன்பத்திலிருந்து மீண்டு பேரின்ப வாழ்க்கையை நடத்தயோகக் கலையை அனைவருக்கும் பயிற்றுவிக்கவேண்டும்.

யோகத்தின் அடிப்படைக் கூறுகள்:

உண்மைகளை அறிதற்கு உறுதுணையாயிருக்கும் கலைதான் யோகம். மெய்ப்பொருளைஅறிவதற்கான வழியை இது காட்டுகிறது. மனதின் இயல்புகளைச் சரியாகப் பார்ப்பதற்கான தெளிவினைஇக்கலை கொடுத்துதவுகிறது. மனதை அளப்பதற்கு மனதே கருவியாகும். மனதை உள்முகமாகத் திருப்பவேண்டும். தேவையற்ற விவகாரங்களில் போகவிடாமல் தடுக்கவேண்டும். அதன் ஆற்றல்கள் யாவும் ஒன்று கூடும்படி செய்யவேண்டும். மனதின் இயல்பு குறித்த அறிவு வருகிறது. தன்னைத் தானேஅகத்தாய்வு செய்துகொள்ளும் ஆற்றல் பெருகுகிறது. மனிதன் பெறும் பேறுகளில் ஞானமே தலைசிறந்தது. ஞானத்தைப் பெறுவதற்கான வழி மனதை ஒருமுகப்படுத்துவதுதான். மனதைத் திரட்டி ஒருமுகப்படுத்துவது என்பதையே யோகம் விளக்குகிறது. நமது துன்பங்களை அகற்றிவிடும். அகத்தில்இருக்கும் சக்திகளை கையாளக் கற்றுக் கொள்ளும் மனிதன் இயற்கை முழுவதையும் தன்வசத்தில்கொண்டு வர முடியும். யோகம் வெறும் செவிக்கு உணவல்ல செயலுக்குரியது.